மூன்றாவது கை

வாழ்க்கையில் நாம் பலமுறை புரிந்துகொள்ள முயற்சித்தும், புரியாத விஷயங்கள், சிறு சம்பவங்களால் தெளிவாகிவிடுவதுண்டு . நம்பிக்கையின் சக்தியை பற்றி நான் முழுவதுமாக புரிந்துகொள்ள முயற்சித்தபோதும், அது போன்ற அனுபவமே ஏற்ப்பட்டது. பல முறை சிந்தித்திதும் புரிபடாத பல விஷயங்கள் இந்த குட்டிக் கதையைப் படித்தவுடன் தெளிவாக விளங்கிவிட்டது.

அந்த நாட்டில், தொடர்ச்சியாக பன்னிரண்டு வருடங்கள் மழை பொய்த்தது. நீர் நிலைகள் வற்றி, வறண்ட பூமியானது. பசியும், பஞ்சமும் மக்களை அழித்துக்கொண்டிருந்தது. அந்த நாட்டின் அரசன் அமைச்சர்களை அழைத்து ஆலோசித்தான். முன்பொரு சமயம் இத்தகைய நிலை வந்தபோது ஒரு முனிவரை அழைத்து வந்ததாகவும், அவர் காலடி பட்டவுடன் மழை பொழிந்ததாகவும், இந்த முறையும் அப்படியே ஆன்மீகவாதிகளை நாடிச் செல்லலாம் என்றும் ஆலோசனை வழங்கினர்.

இதைக் கேட்டு மகிழ்ந்த மன்னன், பல ஆன்மீக குருமார்களை அணுகினான். அவர்கள் அறிவுரைப் படி பிரம்மஞானி ஒருவரை அழைத்து வந்து 48 நாட்கள் தொடர்ந்து யாகமொன்றை நடத்த ஏற்பாடு செய்தான். யாகத்தின் இறுதி நாளில், மக்கள் அனைவரும் ஒன்று கூடி பிரார்த்தனை செய்ய வேண்டுமென்றும், அன்றே மழை பெய்யுமென்றும் சொல்லப்பட்டது.

ஊரின் மையப் பகுதியில் யாக சாலை அமைத்து யாகம் தொடங்கப்பட்டது. தேவர்களுக்கும், தேவதைகளுக்கும், உரிய மந்திரங்கள் சொல்லப்பட்டு, சம்பிரதாயப்படி வேள்வி நடத்தப்பட்டது.

யாகம் முடியும் நாள், மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர். மலை நேரம் நெருங்கியது. யாகமும் முடிந்தது. ஆனால் வானில் மருந்துக்குக்கூட மேகங்கள் இல்லை.

மன்னன் முகத்தில் கலக்கம். மகானின் முகத்தில் வேதனை. மக்களின் முகத்தில் அவநம்பிக்கை.

திடீரென குளிர்ந்த காற்று வீசியது. அடிவானில்,மேகக் கூட்டமொன்று புறப்படத் தொடங்கியது. அனைவரும் அந்தத் திக்கையே ஆவலுடன் நோக்கிக்கொண்டிருந்தபோது, தூரத்தில் ஒரு சிறுவன் ஓடி வருவது தெரிந்தது.

கையில் ஒரு குடையுடன் ஓடி வந்த அந்த சிறுவன், கூட்டத்தில் புகுந்து தன் தோழர்களுடன் நின்றுகொண்டான்.

"எங்கேடா போன? எங்களோட தான வந்துட்டு இருந்த?" என்று மற்ற சிறுவர்கள் அவனிடம் கேட்டனர்.

"உங்களோட வந்துட்டு இருக்கும்போது திடீர்னு ஒரு சந்தேகம் வந்துச்சு. இப்போ யாகத்துக்குத் தானே போறோம், அது முடிந்ததும் மழை பெய்யுமே, அப்போ எல்லாரும் நனஞ்சிருவோமே. அதான் வீட்டுக்கு ஓடிபோய் குடை எடுத்துட்டு வந்தேன்."

அவன் சொல்லி முடிக்கவும் அடை மழை தொடங்கவும் சரியாக இருந்தது.

வியப்புடன் இதனைப் பார்த்துகொண்டிருந்த, யாகத்தை நடத்திய மகான், "மன்னா, உண்மையில் இப்போது பெய்யும் மழை நாம் செய்த யாகத்துக்காகவோ, உனக்காகவோ, இந்த மக்களுக்காகவோ பெய்யவில்லை. இந்தச் சிறுவனுக்காகப் பொழிகறது. இந்த யாகத்தால் பெய்யாத மழை, இந்த சிறுவனின் நம்பிக்கையால் பெய்கிறது" என்றார்.

"இங்கு கூடியிருக்கும் அனைவரும், அரச ஆணைக்குப் பணிந்தும், என்னதான்  நடக்கிறது பார்ப்போம் என்ற எண்ணத்தாலுமே குழுமியிருக்கிறார்கள். மழை பெய்யும் என்ற நம்பிக்கை இவர்களிடத்தில் இல்லை. ஆனால், இந்தச் சிறுவனிடம் அது இருந்தது. அதுவே இந்த மழையை அழைத்து வந்திருக்கிறது." என்று அந்த சிறுவனைப் புகழ்ந்தார்.

நம்பிக்கை என்பது மஹா சக்தி. அந்த சக்தியாலேயே இந்தப் பிரபஞ்சம் இயங்கிக்கொண்டிருக்கிறது. நம் வாழ்க்கையின் ஆதாரமே நம்பிக்கை தான். அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்று தெரியாத நிலையில், நல்லாதாகவே நடக்கும் என்ற நம்பிக்கையில் வாழ்கிறோம்.

கடவுள் என்பதே நம்பிக்கைதான். அவர் எப்படியிருப்பார், எங்கிருப்பார் என்று யாரும் பார்த்தது கிடையாது. ஆனால் இப்படித் தானிருப்பார் என்று நம் நம்பிக்கைக்கு உருவகம் கொடுத்து வணங்குகிறோம்.

யாகங்களில் சொல்லப்படும் மந்திரங்கலானது, பல அந்தணர்கள் ஒன்று கூடி, ஒருமித்த மனத்துடன், ஒரே நோக்கத்துடன் ஜெபிக்கப்படுவது. அவர்களின் நோக்கமே நம்பிக்கையாக, மந்திர ஒளியாக பலமடங்கு பெருகி, எதனை வேண்டி யாகம் நடத்துகிறோமே, அதனை நிறைவேற்றிவைக்கிறது.

இந்த நம்பிக்கையே நம்மிடமிருந்து வெளிப்படும் கதிர்களாக, நம்மையும், நம்மைச் சுற்றியுள்ள உலகத்தையும் இயக்குகிறது. நம் முயற்ச்சியில் வெற்றிபெறுவோம் என்று நினைத்தால், அந்த பாசிடிவ் உணர்ச்சி நம்மிடமிருந்து வெளிப்பட்டு, பிரபஞ்சத்தில் கலந்து, அத்தகைய சம்பவங்களே நடக்கின்றன.

நாம் கவலைகளால் பீடிக்கப்பட்டிருக்கும்போதும், ஏதோவொன்றுக்காக அஞ்சிக்கொண்டிருக்கும்போதும், அந்த சோக உணர்வுகள் வெளிப்பட்டு, மேலும் கவலைகளையே அளிக்கின்றன.இதனால்தான் பெரியவர்கள் எப்பொழுதும் நல்லனவற்றையே நினைக்க வேண்டுமென்று சொல்கின்றனர்.

வாழ்வில் வெற்றி பெறுவது எப்படி?, செல்வந்தராவது எப்படி?, தன்னம்பிக்கையுடன் செயல்படுவது எப்படி? என்று பல புத்தகங்களைப் படித்து நாம் பயனடைகிறோமோ இல்லையோ, இவற்றை எழுதியவர்கள், வெற்றியாளர்களாகவும், செல்வந்தர்களாகவும் ஆகிவிடுகின்றனர். இந்தப் புத்தகங்கள் சொல்லும் விஷயங்களுக்கெல்லாம் ஆதாரம், நம்பிக்கைதான்.

இந்தப் புத்தகங்களைப் படித்ததால் ஒருவர் சாதித்துவிடுவதில்லை. இந்தப் புத்தகத்தில் சொன்னபடி நடந்தால், சாதிக்க முடியுமென்ற நம்பிக்கை இருந்ததால் சாதித்தார்.

இதனால்தான் நம்பிக்கை, மனிதனின் மூன்றாவது கை என்று சொல்லப்படுகிறது. 

0 கருத்துரைகள்:

Post a Comment

Design by WPThemesExpert | Blogger Template by BlogTemplate4U